search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே டாஸ்மாக் விற்பனையாளருக்கு கத்திக்குத்து
    X

    கிணத்துக்கடவு அருகே டாஸ்மாக் விற்பனையாளருக்கு கத்திக்குத்து

    • டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் நாகமாணிக்கம்(வயது51). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு நாகமாணிக்கம் வழக்கம் போல கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி வந்தனர்.

    அவர்கள் நாகமாணிக்கத்தின் மோட்டார் சைக்கிள் அருகே வந்ததும், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    அவரிடம் பொள்ளாச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டனர். நாகமாணிக்கம் அவர்களுக்கு வழி கூறிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் ஏறி தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய டாஸ்மாக் விற்பனையாளரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×