search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • தபால் நிலையத்தில் கிடந்த பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பார்த்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவில் வடக்கு ரத வீதியில் மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. நேற்று காலை தலைமை தபால் நிலையம் என குறிப்பிட்டு வந்த கடிதத்தில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை வெடித்து சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாவட்ட தபால் துறை அலுவலர் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தபால் நிலையத்தில் கிடந்த பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பார்த்தனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து தலைமை தபால் நிலைய சீனியர் போஸ்ட் மாஸ்டர் செல்வராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது வடிவீஸ்வரம் தபால் நிலையத்திலிருந்து வந்ததாக அஞ்சல் முத்திரை பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வடிவீஸ்வரம் தபால் நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தநிலையில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சுசீந்திரம் அருகே மருங்கூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்திய போது முதலில் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்பு அவர் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கடிதத்தை ஒப்புக்கொண்டார். அசோக்குமார் எதற்காக வெடிகுண்டு கடிதத்தை அனுப்பினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அசோக்குமார் கடந்த சில ஆண்டுகளாக தலைமை தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணி நிரந்தரம் செய்யவில்லை.

    இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக்குமார் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×