search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுந்தப்பாடி அருகே நள்ளிரவில் தொழிலாளி கடப்பாரையால் அடித்துக்கொலை

    • கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
    • போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கால்வாய் அமைக்க கம்பி கட்டும் வேலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பழனியப்ப நகர் என்ற பகுதியில் தகர ஷெட் அமைத்து தங்கி உள்ளனர்.

    தினமும் இங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று வந்தனர். தற்போது இவர்கள் கோபிசெட்டிபாளையம்- அத்தாணி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு திரும்பி வந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் மது குடித்துவிட்டு சீட்டு விளையாடினர்.

    அப்போது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியை சேர்ந்த சுஷின் (40), மருங்கூர் தாலுகா ராஜாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கும் இடையே நள்ளிரவு 2 மணி அளவில் சீட்டு விளையாடுவதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் சுஷினை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் (கவுந்தப்பாடி), சண்முகம் (கோபி செட்டிபாளையம்), துரை பாண்டி (கடத்தூர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×