search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போதை தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை வெட்டி கொன்று புதைத்த கொடூரம்
    X

    மது போதை தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை வெட்டி கொன்று புதைத்த கொடூரம்

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கைகாட்டி அருகே உள்ளது கீழ விளாங்குடி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் மரம் வெட்டும் வேலைக்கு செல்வார்.

    இவர் தினமும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது வழியில் மது அருந்தி விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    பக்கத்து ஊரான ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவரும் அறிவழகன் மது அருந்தும் டாஸ்மாக் கடைக்கு வருவது வழக்கம்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். அப்போது முதல் இருவரும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அறிவழகன், வெங்கடாசலம் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவரின் குடும்ப விஷயங்களை பகிர்ந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டனர். மணல் மேடான பகுதிக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடாசலத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கருப்பு கோவில் அருகே குழி தோண்டி புதைத்த அறிவழகன் மண்ணால் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    ஆனாலும் மதுபோதை குறையாத அறிவழகன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை உளறிக் கொட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில், விரைந்து சென்ற கயர்லாபாத் போலீசார் தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ. ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×