என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
- இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்பட்டு வந்தது.
- நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள்.
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் பேசியதாவது:-
100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களுக்கு தக்க சமயத்தில் ஊதியம் வழங்க மத்திய அரசு பொதுவான அதிக நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும் எனவும் இதற்காக அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது. இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள். கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது.
இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்பட்டு வந்தது.
நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். மத்திய அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை அதிகரிக்க வேண்டும்.
நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், அவர்களின் பசியை போக்க வேண்டும் என இந்த சபையின் வாயிலாக மத்திய அரசை கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






