என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உகாண்டா நாட்டில் தனி அறையில் அடைத்து சித்ரவதை- நிதி முறைகேட்டில் ஈடுபட்டதால் மதுரை வாலிபர் கொலை?
    X

    உகாண்டா நாட்டில் தனி அறையில் அடைத்து சித்ரவதை- நிதி முறைகேட்டில் ஈடுபட்டதால் மதுரை வாலிபர் கொலை?

    • கடுமையாக தாக்கப்பட்ட ராமச்சந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்தது.
    • உரிமையாளர் தீபக் உள்ளிட்டோர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தனர்

    மதுரை:

    உகாண்டா நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை வளர் நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 47). இவர் உகாண்டா நாட்டில் உள்ள இந்தியரான தீபக் என்பவர் நடத்தி வரும் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பணிக்கு சென்ற ராமச்சந்திரன் பல மாதங்கள் ஆகியும் தனது குடும்பத்தினரிடம் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்.

    அவரிடம் மனைவி மற்றும் உறவினர்கள் பேச முயன்றும் இணைப்பு கிடைக்காமல் பேச முடிய வில்லை. இதனால் இவரது மனைவி பாமினிக்கு அச்சம் ஏற்பட்டது.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது ராமச்சந்திரன், தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், அவரை உரிமையாளர் தீபக் விசாரித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து பாமினி மதுரையில் இருந்து உகாண்டாவில் உள்ள அந்த கம்பெனிக்கு கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ராமச்சந்திரனை விடுவிக்காமல் எண்ணை நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தனி அறையில் அடைத்து வைத்து தாக்கி வருவதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் ராமச்சந்திரனின் கதி என்னவென்று அறியாத அவரது மனைவி பாமினி ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் உரிமையாளர் தீபக்கிடம் பேச முயன்றார். ஆனாலும் தீபக் பேச மறுத்து விட்டார். இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட ராமச்சந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரனின் உறவினர்கள் உகண்டாவில் உள்ள தமிழ் சங்கம் மற்றும் இந்திய தூதரகத்தின் மூலம் ராமச்சந்திரனை உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து கடந்த 11-ந்தேதி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார். அவரை உரிமையாளர் தீபக் உள்ளிட்டோர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தனர்

    இதையடுத்து உகாண்டா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் ராமச்சந்திரன் உடல் மதுரைக்கு நேற்று விமானத்தில் எடுத்து வரப்பட்டது.பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    உகாண்டாவுக்கு பணிக்கு சென்ற ராமச்சந்திரன் பிணமாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட விஷயத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் தீபக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரிடம் இருந்து உரிய நிவாரனம் பெற்றுத்தரவேண்டும் என்றும் ராமச்சந்திரனின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தீபக் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமச்சந்திரன் மறைவால் வறுமையில் வாடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×