search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநிலங்களில் பலத்த மழை- தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு
    X

    வடமாநிலங்களில் பலத்த மழை- தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு

    • இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது.
    • வடமாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இனிவரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த 15 நாட்களாகவே தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த ஒரு வாரமாக சில்லரை விற்பனை கடைகளில் ரூ.100 முதல் ரூ.130 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60 விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் குடும்பத் தலைவிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    கிலோ கணக்கில் வாங்கி செல்லும் தக்காளியை தற்போது ¼ கிலோ அளவிற்கு மட்டுமே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் தக்காளி விலை உயர்வு காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி ஆகியவை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.90-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கும் விற்பனை ஆனது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாகவே 40-க்கும் குறைவான லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வடமாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இனிவரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, பீன்ஸ், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற காய்கறிகளின் விலை அனைத்தும் கிலோ ரூ.50-க்கும் குறைவாகவே உள்ளது.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.90-க்கும், இஞ்சி-ரூ.230, சின்ன வெங்காயம்-ரூ.180, பச்சை மிளகாய்-ரூ.65-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வடமாநிலங்களிலும் தக்காளியின் விலை எகிறியே உள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களிலும் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்தே விற்பனை ஆகிறது.

    டெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ.127-க்கும், மும்பை-ரூ.130, பெங்களூரு-90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் தொடக்கத்தில் தக்காளி விலை ரூ.25-க்கு கீழ் இருந்தது.

    கனமழை காரணமாக முட்டைகோஸ், காலி பிளவர், வெள்ளரிக்காய், காய்கறிகள் விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×