search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் தமிழ் அறிஞர்கள் மலர் அஞ்சலி
    X

    133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் தமிழ் அறிஞர்கள் மலர் அஞ்சலி

    • திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ் அறிஞர் செந்தூர் பாரிசுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கினார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டிய ராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×