என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலிகிராமத்தில் சித்தா டாக்டர்-மகள் தற்கொலை: மனைவி உயிருக்கு போராட்டம்
- கங்காதரன் கடன் பிரச்சினையில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் மனைவி, மகளுடன் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்து உள்ளார்.
- கங்காதரனின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம், திலகர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தவர் கங்காதரன் (வயது 60). சித்த மருத்துவர். இவரது மனைவி சாருமதி (57). நெடுஞ்சாலைதுறையில் சூப்பிரண்டு ஆக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ஜனபிரியா(24). பட்டதாரி.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஜனபிரியா தனது உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் ஹேமலதா என்பவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார்.
அதில் "நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள போகிறோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமலதா தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஜனபிரியாவின் வீட்டிற்கு விரைந்து வந்தார். அங்கு கங்காதரன், சாருமதி, ஜனபிரியா ஆகிய 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் ஏராளமான மாத்திரை அட்டைகள் சிதறி கிடந்தன. உடனடியாக அவர்களை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கங்காதரன், அவரது மகள் ஜனபிரியா இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். சாருமதியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
கங்காதரன் கடன் பிரச்சினையில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் மனைவி மகளுடன் சேர்ந்து இந்த முடிவை எடுத்து உள்ளார். கங்காதரனின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கங்காதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் வசிப்பவர்களிடம் அதிகம் பேசுவது கிடையாது. ஜனபிரியா பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவர்கள் தற்கொலை செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






