search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோருடன் தற்கொலை செய்த புதுப்பெண் எழுதிய கடிதம் சிக்கியது- கணவரிடம் போலீஸ் விசாரணை
    X

    பெற்றோருடன் தற்கொலை செய்த புதுப்பெண் எழுதிய கடிதம் சிக்கியது- கணவரிடம் போலீஸ் விசாரணை

    • கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
    • தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது65). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இவருக்கு விமலா(55) என்ற மனைவியும், தியா காயத்ரி(25) என்ற மகளும் உள்ளனர். தியா காயத்ரி ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி தனது மகள் தியா காயத்ரிக்கு, வடவள்ளியை சேர்ந்த தீட்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரும் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகு தியா காயத்ரி தனது கணவர் தீட்சித்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசனுக்கு, அவரது தம்பி பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வீட்டில் உள்ள அறையில் கணேசன், அவரது மனைவி விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

    தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில மாதங்களிலேயே தங்களது மகள் திரும்பி வந்ததால் பெற்றோர் மன வருத்தத்தில் இருந்ததும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தெரியவந்தது.

    இதற்காக அவர்கள் பேக்கரியில் சென்று கேக் வாங்கி வந்து, அதில் விஷத்தை தடவி 3 பேரும் சாப்பிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் உள்ள அறையில் தியா காயத்ரி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு காரணமான யாரையும் சும்மா விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

    கடிதத்தை கைப்பற்றி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தில் எழுதப்பட்டு உள்ள விவரங்கள் தொடர்பாக தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    திருமணம் ஆகி சில மாதங்களிலேயே தியா காயத்ரி தற்கொலை செய்துள்ளதால் அவரது மரணத்துக்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    Next Story
    ×