search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேனா நினைவு சின்னம் திட்டம் கைவிடப்படுகிறதா? கருணாநிதி நினைவிடத்திற்குள் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்
    X

    பேனா நினைவு சின்னம் திட்டம் கைவிடப்படுகிறதா? கருணாநிதி நினைவிடத்திற்குள் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

    • பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
    • தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை பல்வேறு நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது மறைவையடுத்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, நினைவிடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.

    இந்நிலையில், கருணாநிதி நினைவிடம் பின்புறம் நடுக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவெடுத்தது.

    42மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரையிலும், 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்படுகிறது.

    குறிப்பாக பேனாவின் பீடம் 2263.08 சதுர மீட்டர், கடலுக்கு மேல் நடைபாதையானது 2073.01 சதுரமீட்டர், கடற்கரை- நிலம் இடையில் பாலம் 1856 சதுர மீட்டர், கடற்கரையில் நடைபாதை 1610.60 சதுர மீட்டர், நினைவிடம் முதல் பாலம் வரை 748.44 சதுர மீட்டர் பாதை என மொத்தம் 8551.13 சதுர மீட்டரில் இந்த நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    மேலும், கடற்கரையில் இருந்து நினைவுச் சின்னத்துக்கு செல்ல கடற்பரப்பில் இருந்து 6 மீட்டருக்கு மேல் அமைக்கப்படும் 650 மீட்டர் நீள பாலமானது 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது

    இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    கடந்தாண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்க அறிவுறுத்தியது. தொடர்ந்து, கருத்து கேட்பு நடத்தப்பட்டு, அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அனுப்பியது.

    அறிக்கையை ஆய்வு செய்த கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம், வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கி இருந்தது.

    பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது.

    இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 7-ந்தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அங்கேயே சிறிய அளவில் பேனா நினைவு சின்னம் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பதில் கருணாநிதியின் நினைவிடத்தில் பேனா நினைவுச்சின்னம் சிறிதாக அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

    Next Story
    ×