search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் கடன் தொகை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
    X

    தி.மு.க. ஆட்சியில் கடன் தொகை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    • விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர்.
    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிப்ரவரி 23-ந்தேதி 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். தச்சநல்லூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனைகூட்டம் நடத்தி உள்ளார். ஆனால் 1 ஆண்டுகளுக்கு முன்பே போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு இடதுசாரிகள் அமைப்புகள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. அவர்கள் மவுனம் சாதித்து வருகிறார்கள். தி.மு.க.வை எதிர்த்து கேள்வி கேட்க எந்த கட்சிகளும் தயங்கி வருகிறது. அ.தி.மு.க. மட்டுமே தி.மு.க.வை எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பி போராட்டங்கள் நடத்தி வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி முடியும் நேரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் கடந்த 19 தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

    தற்போது 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் விண்ணை முட்டும் வகையில் கடன் தொகை உயர்ந்துள்ளது. நிதி அமைச்சர் ஒரு பாதையில் செல்கிறார். அவரிடம் முதல்-அமைச்சர் எந்த கேள்வியும் கேட்க முடியாத நிலை உள்ளது.

    19 மாத தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள், மானிய கோரிக்கையின் போது அளித்த தகவல்கள், 110-ன் விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

    எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் உரிமைக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பினாலும், அமைச்சர்கள் தகுந்த பதிலை கூறுவதில்லை. இதனால் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு தொடர்பாக மக்கள் மன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

    தற்போது பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும்120 விருதுகள் வாங்கப்பட்டது.

    விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இதுதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் குறித்த தீர்ப்பு இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. நானும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், ஜெயலலிதா பேரவை மாநில இணைசெயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரியபெருமாள், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆவரை பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, ஜெனி, மோகன், சண்முககுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், நிர்வாகிகள் வக்கீல் அங்கு அங்கப்பன், பாறையடி மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×