search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் கோவில் இணை ஆணையரை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம்
    X

    ராமேசுவரம் கோவில் இணை ஆணையரை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம்

    • ராமேசுவரம் கோவிலின் உள்பிரகாரங்களில் கம்பி வேலி அமைப்பதை நிறுத்த வேண்டும்.
    • அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறியும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கோவில் இணை ஆணையர் மாரியப்பனை கண்டித்தும், அவரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டி வலியுறுத்தியும் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று கோவில் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

    இதில் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் போஸ், அ.தி.மு.க. நகர் செயலாளர் அர்ச்சுனன், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ, இந்திய தேசிய காங்கிரஸ் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, பாரதிய ஜனதா கட்சி நகர் தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சி நகர் தலைவர் பிரபாகரன், விசுவ இந்து பரிசத் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம் கோவிலின் உள்பிரகாரங்களில் கம்பி வேலி அமைப்பதை நிறுத்த வேண்டும். உள்ளூரை சேர்ந்த சீர் பாத ஊழியர்களை வெளியேற்றக் கூடாது. வெயில் காலங்களில் பக்தர்களுக்கு வசதியாக நிழல் கூரை அமைக்க வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தரிசன பாதை அமைக்க வேண்டும். 22 தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

    இந்த முற்றுகைப் போராட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×