என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை
- போலீசார் இனிமேலாவது கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.
- தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் இருளப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சூரிய பிரகாஷ் (வயது 24). மது போதைக்கு அடிமையான இவர் கஞ்சா புகைப்பது, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கஞ்சா விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் தன்னை திருத்திக் கொள்ளும் வகையில், போலீசார் பலமுறை சூரிய பிரகாசுக்கு அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவில்லை.
இதற்கிடையே முகவூர் இருளப்பசாமி கோவில் தெரு பகுதி சேர்ந்த மற்றொரு குரூப்பாக செயல்படும் சில இளைஞர்களுக்கும், சூரியபிரகாஷ்க்கும் கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சூரியபிரகாசின் வீட்டிற்கு எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் கத்தி மற்றும் அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து துரத்தினர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த சூரிய பிரகாஷ் எதிர்தரப்பு இளைஞர்கள் சிலரை வழிமறித்தார். என்ன தைரியம் இருந்தால் என்னுடைய வீட்டிற்கே வந்து மிரட்டுவீர்கள் என்று போதையில் தகராறு செய்தார். அப்போது ஒருவரை சரமாரியாக தாக்கியதோடு, அவரது கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.
மேலும் மோதலில் ஈடுபட்ட அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதி கலவர பூமியாக மாறியது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரட்டினர்.
இந்த நிலையில் நேற்று இரவு சூரியபிரகாஷ் தன சித்தப்பா குருசாமி (48) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு முகவூர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து, தான் குடியிருக்கும் இருளப்பசாமி கோவில் தெரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று முகமூடி அணிந்திருந்த நான்கு பேர் சூரிய பிரகாசை வழிமறித்தனர். அங்கிருந்து தப்ப நினைத்த இருவரும் வாகனத்தை திருப்பினர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சூரியபிரகாசை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு கழுத்து மற்றும் முகப்பகுதியில் வெட்டு விழுந்தது. இதனை தடுக்க சென்ற சூரிய பிரகாசின் சித்தப்பா குருசாமிக்கும் தோள்பட்டை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை பார்த்த பொதுமக்கள் தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்ல முயன்றனர். அப்போது சூரிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது முகவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் இனிமேலாவது கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். இது போன்ற போதைக்கு அடிமையான இளைஞர்களை காப்பாற்றவும் முயற்சி எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






