என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியந்தோப்பில் நடுரோட்டில் போதையில் தடுமாறி விழுந்த வாலிபர்- பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
    X

    புளியந்தோப்பில் நடுரோட்டில் போதையில் தடுமாறி விழுந்த வாலிபர்- பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

    • விபத்து காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை புளியந்தோப்பு சிவராஜ் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடைக்கு நேற்று இரவு வந்த 30 வயது மதிக்கதக்க வாலிபர் மதுவாங்கி குடித்தார். பின்னர் அவர் போதையில் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அவர் போதையில் இருந்ததால் தள்ளாடியபடி சென்றார். அப்போது அந்த வழியாக தங்க சாலையில் இருந்து புளியந்தோப்பு வழியாக அம்பத்தூர் செல்லும் அரசு பஸ் வந்தது. திடீரென போதையில் சென்றவர் தடுமாறி நடுரோட்டில் விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபரின் தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து விபத்தில் இறந்த வாலிபரின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலம் இருந்தது. அவர் வீட்டுக்கு உணவு வாங்கி செல்லும் போது இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மனதை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    Next Story
    ×