என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் வாலிபரை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர்
- சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர் கொள்ளையர்களுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வழிப்பறியில் ஈடுபட்ட முகமது இலியாஸ் ஆயுதப்படை போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
திருப்பரங்குன்றம் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அபிஷேக்(வயது25). இவர் சம்பவத்தன்று விளாச்சேரி கண்மாய்க்கரை சிவன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை மறித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. தொடர்ந்து அபிஷேக் வைத்திருந்த 1½ பவுன் செயின், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அபிஷேக், திருநகர் போலீசில் புகார் செய்தார். புகாரில், தன்னை அரிவாளால் வெட்டி ராகவன், சீமைராஜா, விளாச்சேரி சின்னமருது, முகமது இலியாஸ் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் நகை, பணத்தை பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன மருதுவை கைது செய்தனர். மற்ற 9 பேரை தேடி வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட முகமது இலியாஸ் ஆயுதப்படை போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர் கொள்ளையர்களுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோலையழகு புரம் முதல் தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவர் வீட்டு முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பெட்டிக்கடைக்கு வந்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த அஸ்ரத் முகமது (23) என்பவர் பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டுள்ளார். ஆனால் குமரவேல் தர மறுத்துவிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த அஸ்ரத் முகமது கத்தியால் குமரவேலை குத்திவிட்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரத் முகமதுவை கைது செய்தனர்.






