search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் பகுதி மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.50 கோடி ஏமாற்றிய வாலிபர்
    X

    மோசடி செய்த வாலிபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றபோது எடுத்தபடம்.

    சங்கராபுரம் பகுதி மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.50 கோடி ஏமாற்றிய வாலிபர்

    • கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை.
    • பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம், பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதனை நம்பிய ஒரு சிலர் பணத்தை கட்டியுள்ளனர். அறிவித்தபடி வட்டி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.

    தொடர்ந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.12 லட்சம் என முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வட்டி திட்டங்களை அறிவித்தார். மேலும் மூரார்பாளையம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், நெடுமானுர், சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு மூரார்பாளையத்தில் நகை கடை, சூப்பர் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் போன்ற பல்வேறு நிறுவனங்களைத் திறந்து ஷமீர் குரூப் ஆஃப் கம்பெனியை தொடங்கினார்.

    இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை. பணத்தை முதலீடு செய்தவர்கள் ஷமீர் அகமதுவிடம் பணத்தைக் கேட்டனர். விரைவில் தருவதாக கூறிய ஷமீர் அகமது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரார்பாளையத்தில் உள்ள கடைகள், அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவானார்.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏஜெண்டுகளை சுற்றிவளைத்து பணத்தை திருப்பி கேட்டனர். இதையடுத்து ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை ஏஜெண்டுகள் கண்டுபிடித்தனர். அவரிடம் பேசி முரார்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய ஷமீர் அகமதுவை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம் கட்டிய ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.50 கோடிக்கு வட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல், ஷமீர் அகமது மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷமீர் அகமதுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×