search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான பெண் எங்கே?
    X

    லாரி டிரைவரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்.

    லாரி டிரைவரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான பெண் எங்கே?

    • ஆன்லைன் மூலம் அறிமுகமாகி திருமணத்திற்காக கழுத்தை நீட்டிய பெண் மறுநாளே கம்பி நீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் லாரி டிரைவரை ஏமாற்றி, பணம் நகைகளுடன் முதல் இரவிலேயே மூட்டை கட்டிய பெண் குறித்து விசாரணை நடத்தினர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா.

    இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். ரம்யா ஓராண்டுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் இறந்ததாக கூறப்படுகிறது. செந்தில் தனது மகனையும் தன்னையும் கவனித்துக் கொள்வதற்காக மறுதிருமணம் செய்திட முடிவு செய்து பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தார்.

    இந்த நிலையில், நண்பர்கள் மூலமாக ஜோடி ஆப்-ல் பதிவு செய்தால் உடனடியாக வரன் கிடைக்கும் என்ற தகவல் அறிந்த செந்தில், தனது முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் புகைப்படத்தை ஜோடி ஆப்-ல் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அதே ஆப்-ல் லதா என்னும் பெண் கன்னியாகுமரி அருகே உள்ள மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் எனவும், தான் கணவரை இழந்து வாழ்வதாகவும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த வரன் வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த செந்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி வந்த செந்தில் ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது உண்மையான பெயர் கவிதா எனவும் தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டதாகவும், அது தொடர்பாக கணவர் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் தன்னையும் தனது தாயாரையும் அவர்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறி செந்திலிடம் புலம்பியுள்ளார். இதுகுறித்து உனது தாயாரிடம் கேட்கிறேன் செல்போனை அவரிடம் கொடு என செந்தில் கூறிய போது, தனது தாயார் ஊமை எனவும் அவரும் தன்னால் அவதிப்பட்டு வருவதாக கூறி அந்த பெண் அழுதுள்ளார்.

    இதை உண்மை என நம்பிய செந்தில் பல்வேறு கட்டங்களாக அந்த பெண் கொடுத்த வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு செந்திலை வரவழைத்த அந்த பெண், தான் ஊரில் இருந்து வந்துள்ளதாகவும், உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார்.

    இதனை நம்பிய செந்தில் சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்தார். பின்பு அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்த செந்தில் தனது மனைவியின் நகை மற்றும் வீட்டில் இருந்த பீரோ சாவியை தனது புது மனைவியிடம் ஒப்படைத்து அழகு பார்த்துள்ளார்.

    மேலும் அவரை அருகில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு அழைத்துச் சென்று அங்கு ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றையும் திருமண பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.

    பகல் முழுவதும் செந்திலுடன் சிரிக்க சிரிக்க பேசிய அந்த பெண் இரவானதும் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கொங்கணாபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று பின் சோர்வாக வந்து வீட்டில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

    அதிகாலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், நகை, பணத்துடன், செந்திலின் புது மனைவியும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது அம்மா ஞாபகம் அதிகமாகி விட்டதாகவும், அதனால் தான் நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் உடனடியாக ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன். ஒரு சில தினங்களில் அம்மாவையும் உடன் அழைத்து கொண்டு வந்து விடுகிறேன் எனக்கூறி சமாதானம் செய்துள்ளார்.

    தொடர்ந்து மாதக்கணக்கில் சாக்குபோக்கு சொல்லி வந்த அந்த பெண், செந்திலின் ஆதார் அட்டையை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளார்.

    பல வழிகளில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் லாரி டிரைவரை ஏமாற்றி, பணம் நகைகளுடன் முதல் இரவிலேயே மூட்டை கட்டிய பெண் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கோவை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் இதுபோல் பலரை மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆன்லைன் மூலம் அறிமுகமாகி திருமணத்திற்காக கழுத்தை நீட்டிய பெண் மறுநாளே கம்பி நீட்டிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×