என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த லாரி டிரைவர்
- நெருக்கமாக இருந்த போட்டோக்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறிய சுரேஷ் மாணவியை மிரட்ட தொடங்கினார்.
- பயந்துபோன மாணவி கடந்த சில நாட்களாக அச்சத்துடன் இருந்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 24). லாரி டிரைவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் சந்தித்து பேசி வந்தனர். நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அப்போது மாணவியிடம் சுரேஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனை மாணவியும் முழுமையாக நம்பியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியுடன் சுரேஷ் ஜோடியாகவும், மிகவும் நெருக்கமாகவும் நின்று ஏராளமான போட்டோக்களை எடுத்துள்ளார். அதனை தனது செல்போனில் பதிவேற்றம் செய்துகொண்டதோடு, தனது நண்பர்களிடமும் காண்பித்துள்ளார். காதலில் மூழ்கிய மாணவி, அதன் பின் விளைவுகள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் நெருக்கமாக இருந்த அந்த போட்டோக்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறிய சுரேஷ் மாணவியை மிரட்ட தொடங்கினார். இதனால் பயந்துபோன மாணவி கடந்த சில நாட்களாக அச்சத்துடன் இருந்துள்ளார்.
இதற்கிடையே தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மாணவி வீட்டிலேயே இருந்துள்ளார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காதலன் சுரேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்த மாணவியின் தந்தை செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவருடன் பேசினார்.
அப்போது வீட்டின் பின்பக்கம் மறைவான பகுதிக்கு வருமாறு மாணவியை அழைத்துள்ளார். உடனே அந்த மாணவியும் தனது தந்தையிடம் தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு அங்கு சென்றார். அங்கு சுரேஷ் தனது செல்போனில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிடுவதாக மீண்டும் மிரட்டி உள்ளார்.
பின்னர் அந்த மாணவியை அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈச்சர் வாகனத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அழுதுகொண்டே மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறினார்.
இருந்தபோதிலும் மகளின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சுரேசை அழைத்து விசாரித்தனர்.
ஆனால் சுரேஷ் அவர்களையும் மிரட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து மாணவியின் தாயார் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
காதலிப்பதாக ஏமாற்றி பின்னர் புகைப்படத்தை காட்டி மிரட்டி பத்தாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






