search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுக்க போட்டி பொதுக்குழுவை நடத்த ஓ.பி.எஸ். திட்டம்?
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுக்க போட்டி பொதுக்குழுவை நடத்த ஓ.பி.எஸ். திட்டம்?

    • கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
    • அதன் முதல் கட்டமாக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் 98 சதவீத தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழக உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.

    அவருக்கு போட்டியாளராக திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம், கோர்ட்டு ஆகியவை இந்த விவகாரங்களில் இன்னமும் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை.

    இதனால் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நடவடிக்கை எடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். அதன் முதல் கட்டமாக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    அடுத்த கட்டமாக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டுகளை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நாடி உள்ளனர். அதன் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு இடையூறுகளை ஏற்படுத்த முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

    மேலும் தங்களது அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று காட்டுவதற்காக அடுத்தடுத்த பதிலடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஒப்படைத்துள்ளனர். 11-ந் தேதி பொதுக்குழுவில் 90 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்று கையெழுத்து போட்டிருக்கும் படிவங்களையும் கொடுத்து உள்ளனர்.

    அதோடு கட்சி விதிகளில் முறைப்படி திருத்தங்கள் செய்யப்பட்ட தகவல்களும் தொகுத்து கொடுக்கப்பட்டு உள்ளன. இதை தேர்தல் ஆணையம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து விட்டு முடிவு செய்ய உள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் முந்தைய உதாரணங்கள் அடிப்படையில் பார்த்தால் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவு எடுக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அத்தகைய நிலை உருவாகி விட்டால் அ.தி.மு.க. தலைமைக் கழகம், கட்சி, கட்சியின் சின்னம் என்று எல்லா நிர்வாகமும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கே சென்று விடும்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதை தடுக்க அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஆலோசனை செய்து வந்தனர்.

    அதன்படி அ.தி.மு.க. போட்டி பொதுக்குழுவை நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள். அந்த கூட்டத்தை சென்னையில் நடத்தலாமா அல்லது வேறு நகரத்தில் நடத்தலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு மாநில அளவில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ஆதரவாளர்கள் உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 100 முதல் 150 பேர் வரை ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    இவர்களை வைத்து போட்டி பொதுக்குழுவை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

    இப்படி போட்டி பொதுக்குழுவை நடத்தி அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றி தலைமை தேர்தல் ஆணையம், கோர்ட்டு, சட்டசபை மற்றும் வங்கிகளுக்கு ஆவணங்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளனர். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அணியினரின் வேகத்துக்கு கடிவாளம் போட முடியும் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அணியினரின் போட்டி பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×