search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம் முழுவதும் கிளைக்கழகங்களில் புதிய நிர்வாகிகள் தேர்வில் ஓபிஎஸ் தீவிரம்
    X

    தமிழகம் முழுவதும் கிளைக்கழகங்களில் புதிய நிர்வாகிகள் தேர்வில் ஓபிஎஸ் தீவிரம்

    • மதுசூதனன் நினைவு நாளை அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கும்படி ஓ.பன்னீர்செல்வமும் உத்தரவிட்டுள்ளார்.
    • எல்லா மாவட்டங்களிலும் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் தங்கள் கைக்கு கிடைக்காதது பின்னடைவாக இருந்தாலும், சட்ட நடவடிக்கைகள், தேர்தல் ஆணையம் மூலம் கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் தீவிரம் காட்டி வருகிறார்.

    பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே தங்கள் தரப்பை வலுப்படுத்த புதிய வட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்தார்.

    மொத்த மாவட்டங்களில் தஞ்சாவூரில் 2, கன்னியாகுமரி, தேனி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். எனவே மற்ற மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார்.

    தங்கள் தரப்புக்கு மாநில அலுவலகம் ஒன்றை தற்காலிகமாக திறக்கவும் முடிவு செய்துள்ளார்கள். இதற்காக மந்தைவெளி பகுதியில் இடம்பார்த்துள்ளார்கள். நிர்வாகிகள் கணிசமாக அந்த பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை.

    நமது பக்கம் உள்ள நியாயம் வெற்றிபெறும் போது அவர்களும் நமது பக்கம் வருவார்கள். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினரை திரட்டவும், அவர்களில் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பதவி ஏதும் இல்லாமல் இருக்கும் கட்சியினரை வரவேற்று பதவி வழங்கவும் கூறியிருக்கிறார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், பகுதி, வட்ட கழக நிர்வாகிகளை நியமிக்க தீவிரமான கட்சி தொண்டர்களை தேர்வு செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரித்து வருகிறார்கள். இந்த பட்டியலுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்கள்.

    மறைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவுநாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மகளிர் அணி செயலாளர் பா. வளர்மதி, பாலகங்கா ஆகியோர் முன்னிலையில் நாளை தண்டையார்பேட்டையில் உள்ள செல்வ வாணி மகால் திருமண மண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதற்கிடையில் மதுசூதனன் நினைவு நாளை அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கும்படி ஓ.பன்னீர்செல்வமும் உத்தரவிட்டுள்ளார். எல்லா மாவட்டங்களிலும் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×