என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி
- காதல் விவகாரத்தில் நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவரது மகள் ஆனந்தி (18). பிளஸ்-2 முடித்த இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
நேற்று மாலை மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
சாலையில் விழுந்ததில் அவருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக கீழே ஓடிச்சென்று மகளை காப்பாற்ற முயன்றார். மேலும் பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனந்திக்கு பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆனந்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், மாணவி ஆனந்தியும், திருப்பூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். நேற்று காலை ஆனந்தியை பார்க்க கல்லூரி மாணவர் நீட் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மற்ற மாணவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் இது பற்றி ஆனந்தியின் தந்தை மணிகண்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாலை ஆனந்தியை அழைத்து செல்வதற்காக மணிகண்டன் நீட் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆனந்திக்கு பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். இந்தநிலையில் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானமடைந்த ஆனந்தி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தியை காதலித்து வந்த கல்லூரி மாணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






