search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலாங்கரை, அக்கரை தூய்மையான கடற்கரைகள்- சென்னை மாநகராட்சி ஆய்வில் தகவல்
    X

    தூய்மையான கடற்கரை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள நீலாங்கரை கடற்கரையை படத்தில் காணலாம்.

    நீலாங்கரை, அக்கரை தூய்மையான கடற்கரைகள்- சென்னை மாநகராட்சி ஆய்வில் தகவல்

    • சென்னையில் நீலாங்கரை, அக்கரை ஆகிய 2 கடற்கரைகள் தூய்மையான கடற்கரை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
    • கடற்கரை பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள் பாராட்டப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள கடற்கரைகளை தூய்மையாகவும், அழகானதாகவும் மாற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை கடற்கரைகள் மக்கள் நாள்தோறும் அதிக அளவில் வருவதால் அங்கு கூடுதல் குப்பை அகற்றும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு காலை, மாலை நேரங்களில் குப்பைகள் அகற்றப்படுகிறது. கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    குப்பை இல்லா பகுதிகள் திட்டத்தையும் மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதேபோல, விதிமீறும் கடைக்காரர்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரைகள் பராமரிப்பு குறித்து வாரந்தோறும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், கடற்கரை பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள் பாராட்டப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவெற்றியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை ஆகிய கடற்கரைகளில் தூய்மையின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 2-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையில் தூய்மை பணிகள் கணக்கெடுக்கப்பட்டு தூய்மை கடற்கரை பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

    தூய்மை பணியாளர்கள், எந்திரங்கள், இரவு நேர தூய்மை பணி, கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குப்பை பராமரித்தல், சாலைகளை தூய்மையாக பராமரித்தல், பொது கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலை தயாரித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, நீலாங்கரை, அக்கரை கடற்கரைகள் முதல் இடத்திலும், பெசன்ட் நகர் 2-வது இடத்திலும், மெரினா 3-வது இடத்திலும், திருவொற்றியூர் 4-வது இடத்திலும், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகள் 5-வது இடத்திலும் உள்ளது. மேலும், தூய்மை பணியில் பின்தங்கியுள்ள கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை தீவிரமாக கடைபிடிக்க மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×