search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ், பொது மக்கள் முன்னிலையில் வியாபாரியை ஓட, ஓட விரட்டி வெட்டிய கும்பல்
    X

    போலீஸ், பொது மக்கள் முன்னிலையில் வியாபாரியை ஓட, ஓட விரட்டி வெட்டிய கும்பல்

    • சிவராமன் நடத்தி வரும் கடை தொடர்பாக அவர்கள் குடும்பத்தினருக்கும், பிரசாந்த் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • பிரசாந்த், முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் சிவராமன் (வயது 35). இவர் வக்கீலுக்கு படித்துவிட்டு அப்பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடைகளை அடைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திசையன்விளை இடைச்சிவிளையை சேர்ந்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான பிரசாந்த் (43), பாளையங்கோட்டையை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரும் வந்து சிவராமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் சிவராமனை சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராமன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    பின்னர் கூட்டுறவு வங்கி எதிரே உள்ள ஒரு மளிகை கடைக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தார். எனினும் அவர்கள் 2 பேரும் துரத்தி சென்றனர்.

    இதை அறிந்ததும் திசையன்விளை போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது 2 பேரும் சேர்ந்து சிவராமனை கடைக்குள் புகுந்து வெட்ட முயன்றனர். இதனை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களை தடுக்க முயன்றார். எனினும் அவர்கள் சிவராமனை அரிவாளால் வெட்டினர்.

    இதில் அவரது கை மணிக்கட்டு துண்டானது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பிரசாந்த், முருகன் ஆகியோரை தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக படுகாயம் அடைந்த சிவராமனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து பிரசாந்த், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிவராமன் நடத்தி வரும் கடை தொடர்பாக அவர்கள் குடும்பத்தினருக்கும், பிரசாந்த் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இதுதொடர்பாக நேற்று அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிவராமனை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து பிரசாந்த், முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×