search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்ந்த சைக்கிளை குறிவைத்து திருடியவர் கைது- 41 சைக்கிள்கள் பறிமுதல்
    X

    உயர்ந்த சைக்கிளை குறிவைத்து திருடியவர் கைது- 41 சைக்கிள்கள் பறிமுதல்

    • வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.
    • திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர், மேற்கு மாம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது.

    இதுகுறித்து போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் டிப்-டாப் நபர் ஒருவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேற்கு மாம்பலம், ரெயில்வே பார்டர் சாலையில் சந்தேகப்படும் படி சைக்கிளில் வந்த டிப்-டாப் நபரிடம் போலீசார் விசாரித்த போது அவர், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற பாபு (53) என்பதும் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 41 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அந்த சைக்கிள்கள் அசோக் நகர் போலீஸ் நிலையம் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் புதிய சைக்கிள் கடை போல் காட்சி அளிக்கிறது.

    கைதான வெங்கடேசனிடம் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×