என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவிப்பு: நாளை கவர்னர் வருகையால் கோவையில் பலத்த பாதுகாப்பு
- கோவை வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
- போராட்ட அறிவிப்பு காரணமாக கோவை வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக நாளை (24-ந்தேதி) கோவை வருகிறார்.
நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அவர் கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
தொடர்ந்து அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். அங்கு சிறப்பு விருது பெறுபவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து பிற்பகலில் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் அவர் பாரதியார் பல்கலைக்கழகம் வருகிறார். இரவு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
25-ந்தேதி பேரூரில் பேரூர் ஆதீனம் நடத்தும் நொய்யல் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின் அவர் கோவை புறப்பட்டுச் செல்கிறார்.
இதற்கிடையே நாளை கோவை வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக கோவை வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை விமான நிலையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.






