என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது
- பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர் காதரம்மாள், தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் நத்தம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியின் தாளாளராக மேலப்பாளையம் அஷ்ரத் பிலால் தெருவை சேர்ந்த குதுபுதீன் நஜீம்(வயது 47) என்பவர் இருந்து வருகிறார். சமீப காலமாக இவர் அப்பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் அவர் அந்த மாணவிகளை தனியாக தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவிகள் தனது சக தோழிகளிடம், பள்ளி தாளாளர் தவறாக நடக்க முயன்றதாக கூறி உள்ளனர். உடனே அவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பள்ளிக்கு திரண்டு வந்து மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், பாலியல் தொல்லை கொடுத்துவரும் பள்ளி தாளாளரை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து விரைவில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவிகள் மற்றும் போராட்டம் நடத்திய பெற்றோர், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்துலெட்சுமி விசாரணை நடத்தினார். அதில் பள்ளி தாளாளர் குத்புதீன் நஜீப், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை நடத்திய பின்னர் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விசாரணையில், பள்ளி தாளாளரின் பாலியல் தொல்லைகள் குறித்து ஏற்கனவே மாணவிகள் அடிக்கடி பள்ளி முதல்வரான தச்சநல்லூர் கோகுல்நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்த காதரம்மாளிடம்(58) புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ, தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமாவுடன் சேர்ந்து கொண்டு மாணவிகளை மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர் காதரம்மாள், தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.