search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் வீடு புகுந்து விவசாயி வெட்டிக்கொலை: முன்விரோதத்தால் கும்பல் வெறிச்செயல்
    X

    களக்காட்டில் வீடு புகுந்து விவசாயி வெட்டிக்கொலை: முன்விரோதத்தால் கும்பல் வெறிச்செயல்

    • கொலை பற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • முன்விரோதம் காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கும்பலாக வந்து இசக்கி பாண்டியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 52). விவசாயி. இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது வீட்டின் அருகே அவரது தாயார் உச்சிமாகாளி டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த ஊரில் மின்சாரம் தடைபட்டது. அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்களில் இசக்கிபாண்டி வீட்டின் அருகே வந்தனர். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.

    அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த இசக்கிப்பாண்டியை அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனால் அலறித்துடித்த இசக்கி பாண்டியனின் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் எழுந்து அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த இசக்கிப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    கொலை பற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில், முன்விரோதம் காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கும்பலாக வந்து இசக்கி பாண்டியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மேலகாடுவெட்டியில் வழக்கமாக தினசரி காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி திட்டமிட்டு மர்மநபர்கள் இசக்கி பாண்டியை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய கும்பல் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×