search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை விரைவில் உயரும்- ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர் தகவல்
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை விரைவில் உயரும்- ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர் தகவல்

    • கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்தது.
    • தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட பண்ணைகளில் 5.50 கோடி, முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விற்பனை விலையை, இந்தியா முழுவதும் உள்ள விலையை அனுசரித்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.

    கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்ததால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்புக்குழு துணைத்தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தலைவருமான சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோழி முட்டை விலை இந்தியா முழுவதும் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் மண்டல என்.இ.சி.சி, இனி முட்டை விலை குறைக்கப்படமாட்டாது, குறைந்த விலை ஒரு முட்டைக்கு 415 பைசாதான் என அறிவித்துள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று 3 பைசா உயர்த்தி 418 என ஐதராபாத் என்.இ.சி.சி அறிவித்துள்ளது.

    பர்வாலா மண்டலத்தில் முட்டை மார்க்கெட் நிலவரம் சரியாகி வருகிறது. மேலும் ஹொஸ்பேட் மண்டலத்திலும், முட்டை விலை இதற்கு கீழ் குறையாது என அறிவிப்பு செய்துள்ளது. மண்டலங்களின் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு, நாமக்கல் விலையும் இதற்கு கீழ் குறையாது.

    எனவே பண்ணையாளர்கள் முட்டைகளை விற்கும் பொழுது, முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு, என்.இ.சி.சி விலையில் இருந்து 30 பைசாவுக்கு கீழ் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை, குறைவான விலைக்கு விற்பனை செய்யாமல், அறிவிக்கப்பட்ட 30 பைசா மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.

    வரும் நாட்களில் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

    Next Story
    ×