search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 1½ ஆண்டுகளில் புதுப்பெண்ணுக்கு கணவர் வரதட்சணை கொடுமை- மாமனார் பாலியல் தொல்லை
    X

    திருமணமான 1½ ஆண்டுகளில் புதுப்பெண்ணுக்கு கணவர் வரதட்சணை கொடுமை- மாமனார் பாலியல் தொல்லை

    • ஒரு கட்டத்தில் தந்தையாக நினைத்த மாமனார் அவரது கொடூர முகத்தை காட்ட தொடங்கினார்.
    • கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மதுராபுரி 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் இன்பராஜ் (வயது 32).

    இவருக்கும் முசிறி சிந்தாமணி தெருவைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட வரதட்சணை வழங்கப்பட்டது.

    இதையடுத்து புதுமண தம்பதியினர் கூட்டு குடித்தனம் நடத்தி வந்தனர். மாமனார், மாமியார், கொழுந்தனார், நாத்தனார் என அனைவரிடமும் அன்பாக பழகிய புதுப்பெண் அனைவரையும் அனுசரித்து நடந்துகொண்ட போதிலும், ஒரு சில மாதங்களில் அவரது வாழ்க்கை கசக்க தொடங்கியது.

    திடீரென்று கணவர் இன்பராஜ், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் மற்றும் 10 பவுன் நகை வாங்கி வருமாறு வற்புறுத்த தொடங்கினார். தனது திருமணத்திற்கே தந்தை கடன்பட்ட நிலையில் அவ்வளவு நகை, பணத்துக்கு எங்கே போவேன் என்று தனது பெற்றோர் நிலையை கணவரிடம் பக்குவமாக எடுத்துக்கூறினார்.

    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத கணவர் மனைவி என்றும் பாராமல் அவரை துன்புறுத்த தொடங்கினார். தினமும் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு வீட்டில் இருந்த அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    நடந்த விபரங்களை பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று நினைத்து கொடுமைகளையும், சித்ரவதைகளையும் பொறுத்துக் கொண்டு கணவருடன் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    ஒரு கட்டத்தில் தந்தையாக நினைத்த மாமனார் அவரது கொடூர முகத்தை காட்ட தொடங்கினார். கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத புதுப்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். கணவரிடம் கூற பயந்து விலகிச்சென்ற அவரை மாமனார் தொடர்ந்து துரத்தினார். இதனால் வீட்டில் இருக்கும்போதெல்லாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தினார். கணவர், மாமனாரின் தாக்குதல்களை தாங்கிக்கொள்ள முடியாத அவர் தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அறிந்தனர். பின்னர் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் இன்பராஜ், பாலியல் தொல்லை அளித்த மாமனார் மோகன்ராஜ், மாமியார் ராஜேஸ்வரி, கொழுந்தனார் மகேஷ், நாத்தனார் பிரேமலதா ஆகிய 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கூட்டு குடும்பத்தில் குதூகலமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் திருமணம் செய்துகொண்டு குடித்தனம் வந்த புதுப்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×