search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு: சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் செய்த 195 பேர் கைது
    X

    விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு: சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் செய்த 195 பேர் கைது

    • ரெயில் மறியல் போராட்டத்தால் இன்று காலை முதலே ஜங்ஷன் ரெயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது.
    • 4-வது பிளாட்பார்மில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்ல தயாராக நின்ற ஹிம்சாகர் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து இன்று காலை முதலே சேலம் மாநகர போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் என 200-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே சண்முக ராஜா தலைமையில் ஜங்ஷன் தபால் நிலையம் அருகே இருந்து 150-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ரெயில் நிலைய நுழைவாயில் அருகே பேரிகாடுகள் வைத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அதை தள்ளிக்கொண்டு போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதை அடுத்து ரெயில் நிலைய நுழைவு வாயில் வழியாக ரெயில் மறியலுக்கு முயன்ற 21 பெண்கள் உள்பட 170-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ரெயில் நிலையத்தின் பின்பகுதி வழியாக ரெயில் நிலையத்திற்குள் சென்ற 20-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட குழு உறுப்பினர் பரமேஸ்வரி தலைமையில் 4-வது பிளாட்பார்மில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்ல தயாராக நின்ற ஹிம்சாகர் ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் சுமார் 1/2 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. போராட்டத்தில் மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் இன்று காலை முதலே ஜங்ஷன் ரெயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது.

    இதேபோல் சீலநாயக்கன்பட்டி திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமையில் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×