search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்பு கொடியுடன் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்
    X

    பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்பு கொடியுடன் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்

    • காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர்.
    • பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள்.

    சென்னை:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதால் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டனர். இதற்கிடையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நேற்று இரவே காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் போலீசாரிடம் போராட்டத்தில் பங்கேற்க மட்டும் அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி சென்னையில் உள்ள 6 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் வீட்டுக்காவலில் இருந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கருப்பு கொடி போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதமர் மோடி பிற்பகல் 2.40 மணிக்கு வருவதால் போராட்டத்தை மதியம் 1 மணிக்கு நடத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். பகல் 12 மணிக்கு மேல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக போராட்ட களத்திற்கு வரத் தொடங்கினார்கள். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லப பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, அசன் ஆருண், துரை சந்திரசேகர், கே.வி.தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சிரஞ்சீவி, ரஞ்சித் குமார், விஜயசேகர், ரவிராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ் ராஜசேகரன், முத்தழகன், டெல்லி பாபு, ரஞ்சன் குமார், அடையார் துரை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

    இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர். பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    முதலில் கே.எஸ்.அழகிரி மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். தொண்டர்கள் அவற்றை பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

    கருப்பு கொடி போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டு இருந்தது. மேடையை சுற்றி இரும்பு தடுப்புவேலி அமைத்து அதற்குள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். போராட்ட களத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பஸ்சும், வேன்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன், து.வெ.வேணு கோபால் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Next Story
    ×