search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட்டும்... யோகா பயிற்சியும்...
    X

    செஸ் ஒலிம்பியாட்டும்... யோகா பயிற்சியும்...

    • செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி.
    • மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மீதான பிம்பம் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமும், பாரம்பரியமும் இணைந்திருந்தது. நம் நாட்டவர் மட்டுமல்ல வெளிநாட்டினரும் வாய் பிளந்து, ரசித்து, ருசித்து செஸ் ஒலிம்பியாட்டை ஒரு திருவிழாவாக கொண்டாடி தீர்த்தோம். நேப்பியார் பாலம் முதல் தம்பி சிலை வரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் என்றால் அது மிகையாகாது. செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி. மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுரியின் பேராசிரியர் இந்திரா தேவி மேற்பார்வையில் செஸ் வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    அது குறித்த ஒரு நேர்காணல்!

    யோகா மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம்?

    யோகா என்பது மருந்தில்லா மருத்துவம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு யோகா மூலமும், இயற்கை உணவின் மூலமுமே சரி செய்து விடுவோம். குறிப்பாக ஐடி துறையிலும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் சீக்கிரம் சர்க்கரை, உடல் பருமனுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு நிச்சயம் இந்த யோகா வரப்பிரசாதம் தான்.

    செஸ் ஒலிம்பியாட்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு எங்களை அணுகியது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி தான் யோகாவில் தலைமையகம் என்பதால், வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. 187 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழகம் வந்தனர். கிட்டத்தட்ட 2000 வீரர்கள். அவர்கள் யோகா பயிற்சியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாங்கள் 21 குழுக்களாக பிரிந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தோம். சுமார் 60 யோகா மருத்துவர்கள் இதில் பங்கேற்றோம்.

    வெளிநாட்டு வீரர்கள் யோகாவில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்?

    ஆரம்பத்தில் கொஞ்சம் பேர் தான் இதில் பங்கேற்றனர். யோகா பயிற்சியை பற்றி அறிந்ததும் நிறைய பேர் இதில் பங்கேற்க துவங்கினர். இது அவங்களுக்கு புதுவித அனுபவமா இருந்ததா சொன்னாங்க. ஸ்ட்ரெஸ் ரிலீபா இருந்ததாகவும், புத்துணர்ச்சியுடன் இருந்ததாகவும் சொன்னாங்க.

    எத்தனை நாட்கள் அவங்களுக்கு யோகா பயிற்சி அளித்தீர்கள்?

    செஸ் வீரர்கள் யோகா கத்துக்கிறதில ரொம்பவும் ஆர்வம் காட்டினாங்க. நம்ம தமிழக அரசு இலவசமாகவே யோகா பயிற்சி அளித்ததை வியந்து பார்த்தாங்க. எங்க நாட்ல யோகா மிகவும் காஸ்ட்லியானது. இங்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினர். செஸ் ஒலிம்பியாட் நடந்த 14 நாட்களுமே நாங்க யோகா வகுப்பு எடுத்தோம். காலை 8 மணி முதல் 12 மணி வரை நாங்க யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.

    எந்த நாட்டினர் ஆர்வமுடன் யோகா கத்துக்கிட்டாங்க?

    நைஜீரியா, அமெரிக்கர், உகாண்டா இவங்க ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. ஜார்ஜியா, டான்சானியா, டொமினிகா, ஸ்பெயின், உக்ரைன் இந்த நாடுகளில் இருந்தும் யோகா கத்துக்கிட்டாங்க. அவங்க அனுபவங்களை வீடியோவா எங்க கிட்ட பகிர்ந்திக்கிட்டாங்க.

    செஸ் வீரர்களுக்கு யோகா எந்தளவுக்கு பயனுள்ளதா இருந்தது?

    முதல்ல செஸ் வீரர்களுக்கு ஏன் யோகா முக்கியம்னு சொல்றேன். மத்த விளையாட்டுக்கள் மாதிரி செஸ் கிடையாது. இது மைண்ட் கேம்ஸ். ஒரே இடத்தில் உக்கார்ந்து மூளைக்கும், கண்களுக்குமான ஒரு விளையாட்டு. இதனால், சீக்கிரமாவே அவங்க உடலும், மனமும் சோர்வடைந்துவிடும். புது இடம்ங்கிறதால தூங்குவதற்கும் சிரமம்பட்டிருப்பாங்க. யோகா பண்ணுவதால் நல்லா தூங்கினதா சொன்னாங்க. விளையாட்டுல நல்லா கவனம் செலுத்தினாங்க.

    என்னென்ன யோகா பயிற்சி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க…

    யோகா ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், தாரன பயிற்சி, யோக நித்திரை பயிற்சி அளித்தோம். பிராண முத்திரை, இருதய முத்திரை, கைகளை தட்டுவதையும், சிரிப்பு யோக சிகிச்சையும் கொடுத்தோம். திராட்டகா என்ற கண்களுக்கான பயிற்சியும் அளித்தோம்.

    யோகா பயிற்சி பெற்ற வீரர்கள் என்ன சொன்னாங்க…

    யோகா பண்ணிட்டு போனதால தான் எங்களால நல்லா விளையாட முடிந்ததுனு சொன்னாங்க. தூங்கி எழுந்து புத்துணர்ச்சியோட இருந்ததா சொன்னாங்க. தன்னம்பிக்கையும், உற்சாகமும் இருந்ததாகவும் சிந்திக்கும் திறமை அதிகப்படுத்தியதுனு சொன்னாங்க.

    கொரோனா சமயத்தில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

    கொரோனா சமயத்தில், எங்கள் மருத்துவக் குழு மருத்துவமனைக்கே சென்று நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம் சொல்லிக் கொடுத்தோம். ஆக்சிஜன் அளவு உடலில் குறையும் நோயாளிகளுக்கு நாங்கள் அளித்த மூச்சுப் பயிற்சியின் மூலம் அவர்களின் உடலில் இயற்கையான முறையில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது.

    Next Story
    ×