search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. அலுவலகத்தை உடைத்து திருடப்பட்ட வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் உள்பட 300 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. விரைவில் சம்மன்
    X

    அ.தி.மு.க. அலுவலகத்தை உடைத்து திருடப்பட்ட வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் உள்பட 300 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. விரைவில் சம்மன்

    • ராயப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை முறைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
    • இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகியான மகாலிங்கம் ராயப்பேட்டை போலீசில் கடந்த 11-ந்தேதியே புகார் அளித்திருந்தார். இதன் பின்னர் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், அ.தி.மு.க. அலுவலகத்தில் திருட்டு போன பொருட்கள் என்னென்ன, சொத்து ஆவணங்கள் எவை? என்பது பற்றி விரிவாக புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 147, 148, 454, 380, 409, 427, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராயப்பேட்டை போலீசார், அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது தமிழக அரசின் தரப்பில் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை முறைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான ஓ.பன்னீர் செல்வம் ஆதவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து 300 பேர் அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து பொருட்களை திருடிச் சென்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 300 பேருக்கும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் ராயப்பேட்டை போலீசார் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உள்ளனர்.

    இந்த வீடியோக்களை போட்டு பார்த்தும் சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்பவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து அந்த ஆவணங்கள் தற்போது எங்கு இருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறைப்படி கிடைக்க பெற்றதும் இதற்காக தனி விசாரணை அதிகாரி இன்று நியமிக்கப்பட உள்ளார். டி.எஸ்.பி. அல்லது இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    இதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் போது அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் சென்று பொருட்கள் திருடிச் சென்ற அறை, பீரோக்கள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பார்த்து தடயங்களை சேகரிக்க உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுலகத்துக்குள் ஒரு மாதம் யாரும் செல்லக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டி ருந்த நிலையில் அந்த தடை கடந்த 20-ந்தேதி விலகி விட்டது. இதன் பின்னரும் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் கடந்த ஒரு வாரமாக யாருமே அனுமதிக்கப்படவில்லை. வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. தலைமை கழகமே முடிவெடுத்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலுவலகத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து பொருட்களை திருடிச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவற்றில் ஐ.பி.சி. 380 (திருட்டு), ஐ.பி.சி. 454 (அத்துமீறி நுழைதல்), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளும் போடப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் மீது இந்த சட்டப் பிரிவுகள் பாய்ந்து உள்ளன. இந்த 3 சட்டப் பிரிவுகளும் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளாகும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×