என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் ரகளை- திண்டுக்கல் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
- தங்கபாண்டியன் பணி மாறுதல் பெற்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆயுதப்படை போலீசில் சேர்ந்தார்.
- பணியில் இருந்தபோது தங்கபாண்டியன் மது போதையில் காரை ஓட்டிச் சென்று ஆயுதப்படை மைதானத்தின் மீது மோதினார்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 38). இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். நன்னடத்தை விதிகளை மீறியதாக இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பணி மாறுதல் பெற்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆயுதப்படை போலீசில் சேர்ந்தார். பணியில் இருந்தபோது இவர் மது போதையில் காரை ஓட்டிச் சென்று ஆயுதப்படை மைதானத்தின் மீது மோதினார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.
பின்னர் போதையில் விழுந்து கிடந்த அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் மற்றும் டாக்டர்களிடம் தவறான முறையில் பேசி ரகளையில் ஈடுபட்டார்.
இது குறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கபாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






