என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை மாநகராட்சியை கண்டித்து தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பெண்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சென்னை மாநகராட்சியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ராயபுரம்:
சொத்து வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியை கண்டித்தும் தண்டையார் பேட்டை மண்டல அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். பெண்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், உயர்த்திய சொத்து வரிகளை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை மாநகராட்சியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே சிறிய ரக பொக்லைன் எந்திரம்(பாப் கட்) மேடையில் நிறுத்தப்பட்டு இருந்தது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 55 பாப் கட் வண்டிகளில் 8 பாப் கட் வண்டிகள் மாயமாகி இருப்பதாகவும், இதுபற்றி சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதை காண்பிக்கும் வகையில் அந்த வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். இதில் நிர்வாகிகள் சீனிவாசன், பாலாஜி நித்தியானந்தம், கணேசன், என்.எம்.பாஸ்கர், சேவியர், மதுரை வீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






