search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கிய அ.தி.மு.க. வேட்பாளர்
    X
    அ.தி.மு.க. வேட்பாளர் இன்று பிரசாரத்தை தொடங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கிய அ.தி.மு.க. வேட்பாளர்

    • முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதன் காரணமாக கடந்த 3-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் பிரச்சாரத்தையும் தொடங்காமல் இருந்து வந்தனர். எனினும் முக்கிய அமைப்பினர், விசைத்தறியாளர்கள், வணிகர் சங்க பேரமைப்பினரை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.

    இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியது.

    பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தலைமை தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 2501 பேர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.

    அந்த கடிதத்தை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று டெல்லி தேர்தல் கமிஷனில் வழங்கினார். இந்நிலையில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினர். இதனால் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    இதையடுத்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.

    முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×