என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை: ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் கைது
- மருத்துவ செலவிற்காக பணம் கேட்டபோது ருக்குமணி, தனது வீட்டில் பணம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
- கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் குற்றவியல் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சிவசக்தி காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் லிங்கேஸ்வரன். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாயார் ருக்குமணி, தாராபுரம் -பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகர் பகுதியில் கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்குமணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். சிகிச்சைக்காக மகள் வீட்டுக்கு சென்ற நிலையில், மருத்துவ செலவிற்காக பணம் கேட்டபோது ருக்குமணி, தனது வீட்டில் பணம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே லிங்கேஸ்வரன், தனது தாயார் வீட்டுக்கு அதிகாலை சுமார் 3 மணி அளவில் சென்றுள்ளார்.
இந்நிலையில் தாயாரின் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிங்கேஸ்வரனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். மேலும் வீட்டிற்குள் திருட முயற்சி செய்வதற்காக சென்ற தாராபுரம் சங்கர் மில் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் தாராபுரம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் ஆகிய இருவரும் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
வெளியே நின்று கொண்டிருந்த குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, லிங்கேஸ்வரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தார். கத்தியினால் கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
பின்னர் திருமூர்த்தி மற்றும் அப்துல் ரகுமான், தினேஷ்குமார் ஆகிய மூவரும் லிங்கேஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து லிங்கேஸ்வரன், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு தேடிய போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் ரகுமான் பகலில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகவும், இரவில் திருடனாகவும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் குற்றவியல் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






