search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வீட்டிற்கு நடந்து சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு- ரவுடி உள்பட 2 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் வீட்டிற்கு நடந்து சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு- ரவுடி உள்பட 2 பேர் கைது

    • பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முருகன் என்ற கட்டை முருகன் (வயது27), அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் (19) ஆகியோர் அந்த பெண்ணை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்தி தருவைக்குளம் சென்றனர். அங்கு முருகன் அந்தப்பெண்ணை கற்பழித்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை அவரது வீட்டின் அருகில் விட்டுச் சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்ட கோகுல்ராம் அவரை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் முருகன், கோகுல்ராம் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, மணிமாறன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா அடங்கிய தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை மிரட்டி முருகன் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவரிடமிருந்து ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற முருகன் தவறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோகுல்ராமும் கைது செய்யப்பட்டார்.

    கைதான முருகன் என்ற கட்டை முருகன் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 16 வழக்குகளும், சிப்காட் மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என 18 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×