search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
    X

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

    • ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இம்மையம் செயல்படும்.

    சென்னை:

    நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

    அதன்படி முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப் பணியாளர் என இந்த மையங்களுக்காக 500 மருத்துவர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள், 500 செவிலியர்கள், 500 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இம்மையம் செயல்படும். இந்த நலவாழ்வு மையங்கள் மூலம் அப்பகுதிகளில் வாழும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×