search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐகோர்ட்டு வழங்கிய நூதன தண்டனை: அண்ணாசாலையில் வாலிபர் விழிப்புணர்வு பிரசாரம்
    X

    ஐகோர்ட்டு வழங்கிய நூதன தண்டனை: அண்ணாசாலையில் வாலிபர் விழிப்புணர்வு பிரசாரம்

    • ‘மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்
    • நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை- அண்ணாசாலையில் கடந்த மாதம் 7-ந்தேதி அன்று மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்ட வழக்கில் 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐதராபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினாய் (வயது 22) என்ற 'யூடியூபர்' பிரபலத்தை போலீசார் தேடி வந்தனர்.

    அவர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் வழங்கிய நிலையில், 'அந்த வாலிபர் எங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் 3 வாரங்கள் திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும்.

    மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்' என்று நிபந்தனையும் விதித்தார்.

    அதன்படி வாலிபர் கோட்லா அலெக்ஸ் பினாய் காலை மற்றும் மாலை வேளையில் அண்ணாசாலை-தேனாம்பேட்டை சந்திப்பில், 'சாலை விதிகளை கடைபிடிப்போம். சாலை விதிகளை மதிப்போம். விபத்துகளை தவிர்ப்போம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    'இரு சக்கர வாகனத்தை கொண்டு சாலையில் சாகசங்கள் எதுவும் செய்ய மாட்டேன்' என்ற வாசகங்கள் அடங்கிய பாதகையை கையில் ஏந்தியபடி நின்றார்.

    மேலும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும் வாகன ஓட்டிகளிடம் வினியோகம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இனி நான் எங்கேயும் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்' என்று உறுதியுடன் கூறினார்.

    நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

    Next Story
    ×