என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே நீரில் மூழ்கிய பாலம்
- நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
- பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் படகு போக்குவரத்து தொடங்குகிறது.
மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இதன்காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 103அடியை எட்டியுள்ளது.
இதனால் பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் அமைந்துள்ள லிங்காபுரம்- காந்தவயல் கிராமங்களுக்கு இடையிலான 20 அடி உயர் மட்ட பாலம் ஏற்கனவே தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது இணைப்பு சாலையும் மூழ்கியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்காக வெளியூர் செல்வோர் என பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து அரை கிலோ மீட்டர் நடந்து சென்று பின்னர் அங்கிருந்து பரிசல் மூலம் தங்களது கிராமங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் அரை கிலோ மீட்டர் நடந்து செல்ல சிரமப்பட்டு தண்ணீரில் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். சில சமயம் அந்த வாகனங்கள் சிக்கி பழுதாகி நின்று வருகிறது. இதன் காரணமாக மக்களின் சிரமத்தை போக்க சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் படகு போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பேரூராட்சி பகுதியில் இருந்து லாரி மூலம் எந்திர படகு லிங்காபுரம் கொண்டுவரப்பட்டு கிரேன் உதவியுடன் படகு இறக்கி பவானி ஆற்றில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் லிங்கா புரம் காந்தவயல் இடையே படகு போக்குவரத்து இயக்கப்படும் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.