என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 5 ஆயிரம் கன அடி தண்ணீரையாவது முறையாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.
- தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் பேசும்போது,
குறுவை பயிர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குறுவைக்கு காப்பீடு திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்று முறை குழு ஆகியவற்றிற்கு தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மாநிலங்களில் உள்ள அணைகளின் விவரத்தை தெரிவித்து நீர் திறக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
குறுவைக்கு காப்பீடு திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதாக மத்திய அரசு கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை கூறினால் அந்த போக்கை மாற்றி குறுவைக்கு காப்பீடு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் பேசும்போது :-
தஞ்சை அருகே உள்ள உய்யக்கொண்டான் , புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது . எனவே தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா விவசாயிகள் கேட்டது வினாடிக்கு 15000 கன அடி தண்ணீர். தற்போது உத்தரவிட்டதோ அதனைவிட மிக மிக குறைவாகும். எனவே 5000 கன அடி தண்ணீரையாவது முறையாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.
பாசனதாரர் சங்கத் தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
ஆம்பலாப்பட்டு தெற்கு- கீழக்கோட்டையில் இருந்து மேல் கிழக்காக ஆலத்தூருக்கு செல்லும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தார் சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என்னை தார் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.






