search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய தண்ணீர்
    X

    கொள்முதல் நிலையத்தில் நெல்லை சூழ்ந்துள்ள மழைநீர்.

    தொடர் மழையால் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய தண்ணீர்

    • நெல் குவியல்கள் கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
    • தண்ணீர் தேங்கி நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    பூதலூர்:

    பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் மழை கொட்டியது.இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.மழை காரணமாக அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து குவித்துள்ள நெல் மணிகள் பாதிக்கப்பட கூடும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் ஏராளமான நெல் குவியல்கள் கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    அதைப்போலவே திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையிலும் விவசாயிகள் ஆங்காங்கே அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலைகளில் காயவைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று பகல் முழுவதும் குளிரான ஒரு சூழ்நிலை நிலவியது. வெயில் தலை காட்டாததால் சாலைகளில் குட்டி காயவைக்கப்பட்ட நெல்மணிகள் காய முடியாத நிலை ஏற்பட்டது. மாலையில் நெல்லை மூடி வைத்துவிட்டு வந்த பிறகு இரவு 8:30 மணியிலிருந்து 3 மணி நேரத்திற்கு மழை கொட்டியது.இதனால் மூடி வைக்கப்பட்ட நெல் குவியல்களுக்கு அடியில் தண்ணீர் சென்று நனைந்து விடும் நிலை உருவாகியுள்ளது. பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்ததால் முளைத்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கோவில்பத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களுக்கு ஊடே மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பூதலூர் மேம்பாலத்தில் காய வைத்து மூடி வைக்கப்பட்டுள்ள நெல்குவியலில் மழை நீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் கொள்முதல் செய்ய காத்திருக்கும் விவசாயிகளிடம் ஈரப்பத அளவை வலியுறுத்தாமல் குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

    அது மட்டுமல்லாமல் மையங்களில் கொள்முதல்செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பூதலூர் பகுதியில் பெய்த பெரும் மழையால் சந்து தெருபகுதியில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×