search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை
    X

    தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

    • கடந்த 21-ந்தேதி 15 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்
    • நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் காலம் காலமாய் தொடர்ந்து வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது, தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களை அபகரிப் பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்போது சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளையும் இலங்கைக்கு கொண்டு நாட்டுடமையாக்குவது நடந்து வருகிறது. இதனால் படகுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் தமிழக மீனவர்கள் மாற்று தொழிலை தேட தொடங்கி விட்டனர். இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நிரந்த தீர்வு எட்டப்படாமலேயே இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மேலும் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 200 விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று பாம்பன் மீனவர்களின் படகுகளை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதைப் பார்த்து அச்சம் அடைந்த மீனவர்கள், நமது எல்லையில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குவார்கள் என்று பயந்தனர். மேலும் அவர்கள் அவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனால் அதற்குள் 2 படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதில் தாவிக்குதித்தனர். பின்னர் வழக்கம்போல் பாம்பன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களை அபகரித்து கொண்டதோடு, கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் தங்களது ரோந்து கப்பலில் கட்டி இழுத்து சென்றனர். பின்னர் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு மீனவர்களை அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது பின்னரே தெரியவரும்.

    கடந்த 8-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்த ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த 15 மீனவர்களை 9-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் ரணில் விக்கிரமசிங்கேயின் இந்திய பயணத்தை அடிப்படையாக கொண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    தற்போது மீண்டும் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஒவ்வொரு முறையில் மீனவர்கள் கைதாகும்போது அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. நிரந்தர தீர்வு கிடைக்காமல் எப்போதும் துயர வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையின் தொல்லையின்றி மீன்பிடிக்க செல்வது எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    Next Story
    ×