search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    தஞ்சை மாவட்டத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • சிறப்பு முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவம் 6B-இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்கா–ளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20,29,246 வாக்காளர்களில் 13,46,249 (66.34 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்று கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடாத பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது வருகிற மார்ச் 31-க்குள் நிறைவடைய உள்ளதால் பொது மக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ தங்களது ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6B-இல் பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் வாக்காளர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை e- EPIC ஆக தங்களது மொபைலிலேயே டவுன்லோடு செய்திடலாம் . தேர்தல் நடைபெறும் சமயம் வாக்காளர் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்களும் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் மற்றும் அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். மேற்கூறியவாறு அனைத்து வகையான விண்ணப்பங்களையும் Voters Helpline மொபைல் ஆப் மூலமாகவும் NVSP Portal மூலமாகவும் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×