என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கல்லல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பத்தூர்:

    கல்லல் அருகே உள்ள பிலார் என்ற ஊரை சேர்ந்தவர் அய்யாகண்ணு மகன் வடிவேல்(வயது 28). இவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் பணி முடிந்து நேற்று மதியம், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூரை அடுத்த கண்டரமாணிக்கம் சாலையில் உள்ள ஆத்தங்கரைபட்டி என்ற விலக்கு பகுதியில் வடிவேல் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதிவிட்டார். இதில் நிலை தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன வடிவேல், சிறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கான தமிழக அரசின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சுடுகாட்டு கொட்டகையில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை நகர் ஆற்றுப்பாலம் பகுதியில் சுடுகாடு  உள்ளது. இன்று காலை ஆற்றுப்பாலத்தின் அருகே சென்ற சிலர், சுடுகாட்டு கொட்டகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் கிடந்த இடத்தில், 3 விஷ பாட்டில்களும் கிடந்தன. எனவே அவர் தற்கொலை  செய்திருக்கலாமா? என்று  சந்தேகம் ஏற்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் தேவகோட்டை சரசுவதி வாசகசாலை தெருவைச் சேர்ந்த சாந்தி (வயது55) என தெரியவந்தது.

    இவரது கணவர் ஹரிதாஸ், கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தேவகோட்டை பஸ் நிலையத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார்.

    இவர்களது மூத்த மகள் ஆஸ்திரேலியாவில் உள்ளார். சென்னையில் வசிக்கும் 2-வது  மகள் பிரசவத்திற்காக தேவகோட்டை வந்து இருந்தார்.  அவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் சாந்தி சுடுகாட்டில் இறந்து கிடந்தது மர்மமாக உள்ளது. கடவுள் பக்தி நிறைந்த அவர், கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு புறப்பட்டுள்ளார். ஆனால் இடைப்பட்ட சிலமணி நேரத்திற்குள் அவர், பிணமாக சுடுகாட்டு கொட்டகையில் கிடந்துள்ளார். இதனால் அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் தற்கொலை செய்தார் என்றால், அதற்கான காரணம் என்ன? என்பதும் மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி இன்று இரவு நடைபெறுகிறது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பிரசித்தி பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.

    இங்கு மாதத்தின் முதல் வெள்ளி சிறப்பு வெள்ளியாக கருதப்படுவதால் தமிழகம் முழு வதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இங்கு வந்து திரு இருதய ஆண்டவரை வழிபட்டு ஜெபிக்கும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. இங்கு நடைபெறும் கூட்டு திருப்பலி, நன்றி செலுத்தும் திருப்பலி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது

    இன்று (24-ந்தேதி) இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடை பெறுகிறது. நாளை (25-ந் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருப்பலி பூஜைகளும் நடைபெறுகிறது.

    ஏசு பிறப்பை கொண்டாடும் வகையில் இங்கு பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி பூஜை ஏற்பாடுகளை திருஇருதய ஆண்டவர் திருத்தல அருட் பணியாளர் ரெமிஜியஸ் செய்து உள்ளார்.

    திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசியது தொடர்பாக போலீசாரின் வளையில் 2 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பீரான்லைனில் வசிப்பவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி லாவண்யா (வயது 27). திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    லாவண்யா நேற்றிரவு 9.30 மணியளவில் பணி முடிந்ததும், வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது அங்கு கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லை. இருள் சூழ்ந்திருந்தது.



    தனது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே லாவண்யா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். அப்போது இருளில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் லாவண்யா மீது திடீரென ஆசிட் வீசினர்.

    பெண் போலீஸ் லாவண்யாவின் முகம், கை, உடலில் ஆசிட் பட்டு வெந்தது. இதனால் அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். வலியால் அலறி துடித்தார். ஆசிட் வீசிய மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். பெண் போலீசார் ஆசிட் வீச்சால் கதறி துடிப்பதை பார்த்து திடுக்கிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

    பெண் போலீஸ் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அவர், வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் லாவண்யாவின் தந்தை தண்டபாணி புகார் அளித்தார்.

    டி.எஸ்.பி. பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆசிட் வீசிய நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    லாவண்யாவின் தந்தை அளித்த புகார் மனுவில், தனது மகளின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர். அந்த எண்ணுக்கு மீண்டும் போன் செய்தால் எதிர்முனையில் பேசியவர்கள் போனை எடுப்பதில்லை.

    எனவே இச்சம்பத்தில் போனில் மிரட்டலாக பேசிய நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இத்தகவலின் பேரில் பெண் போலீஸ் லாவண்யாவின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    நேற்றிரவு ஆசிட் வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை லாவண்யா யார் யாரிடம்? பேசினார், அவருக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளது? என்ற பட்டியலை சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட முக்கிய குடியிருப்புகளும் உள்ளன. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.

    இதற்கிடையே பெண் போலீஸ் மீது ஆசிட் வீசியது தொடர்பாக போலீசாரின் வளையில் 2 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

    பெண் போலீசார் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடியில் புதுப்பட சி.டி.க்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,782 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரைக்குடி:

    காரைக்குடியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 34). இவர் பர்மா காலனி தண்ணீர் தொட்டி, முதல் பிட் ஆகிய பகுதிகளில் சி.டி. கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் அனுமதியின்றி புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்படி வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் அருண்குமாரின் 2 கடைகளிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது அனுமதியின்றி விற்பனைக்கு இருந்த பழைய, புதுப்பட சி.டி.க்கள் 1,782-ஐ பறிமுதல் செய்து அருண்குமாரை கைது போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் காரைக்குடி முதல் பிட் பகுதியில் குமரன் என்பவரின் கடையில் இருந்த 82 புதுப்பட சி.டி.க்களை தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய ராஜா பறிமுதல் செய்து குமரனை கைது செய்தார்.

    திருப்பத்தூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள நரியனேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர்கள் 2 பேரும் உறவினர்கள். தென்னைமரத்தை வெட்டியது தொடர்பாக முருகேசனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 18-3-2008 அன்று ஏற்பட்ட தகராறில் முருகேசனை அர்ஜுனன் தரப்பினர் அடித்து உதைத்தனர். அதனை தட்டி கேட்க சென்ற முருகேசன் தரப்பினர் சுகுணா, ஆறுமுகம் உள்ளிட்டவர்களையும் தாக்கினர்.

    மறுநாள் 19-3-2008 அன்று முருகேசனின் ஆதரவாளரான அதே பகுதியை சேர்ந்த காந்தி என்ற மணியை (வயது 23) நரியனேரி பெருமாளப்பன் கோவில் அருகில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அர்ஜுனன் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை வழக்கில் அர்ஜுனன், ஜெயராமன், ராஜகோபால், திருப்பதி, குப்பம்மாள், தனலட்சுமி, தெய்வானை ஆகிய 7 பேர் மீது கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியே வந்த அர்ஜுனன், குப்பம்மாள், தெய்வானை ஆகிய 3 பேரும் சில மாதங்களிலேயே திருப்பத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு திருப்பத்தூரில் உள்ள 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

    நேற்று இந்த வழக்கை நீதிபதி ஏ.முருகன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமன் (42), ராஜகோபால் (65) ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், திருப்பதிக்கு (31) 2 ஆண்டு சிறை தண்டனையும், தனலட்சுமிக்கு ஒரு ஆண்டு மற்றும் 3 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

    தமிழகம் முன்னேற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தவேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் முதன் முதலில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சோதனை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகம் ஊழலில் சிக்கி தற்போது தலைகுனிவை சந்தித்து உள்ளது.

    சமீபத்தில் சேகர்ரெட்டி என்பவரின் வீட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் பணமும், 170 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் ஆளும் கட்சியில் உள்ள முக்கிய அமைச்சருக்கு நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே தமிழகம் முன்னேற வேண்டுமானால் இந்த திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தினால் மட்டுமே நல்ல விடிவு காலம் பிறக்கும் என்பதை தற்போது நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்கள் கூறி வருகின்றன.

    ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதை பார்த்தால் கேலிக்கூத்தாக உள்ளது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க காரணமானவர்களே இவர்கள் தான். எனவே வருகிற 3-ந்தேதி தி.மு.க. சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்ததை அவர்கள் திரும்ப பெறவேண்டும்.

    ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பது மத்திய அரசின் அரசாணை தான். இன்னும் ஒரு வாரத்தில் அந்த அரசாணை கோர்ட்டில் இருந்து வெளிவந்துவிடும் என்று நம்புகிறோம். இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

    பிரதமர் நரேந்திரமோடி நல்ல திறமையான ஆட்சியை மட்டும் அல்லாமல், ஊழல் இல்லாத இந்தியாவை தரவேண்டும் என்பதற்காக மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்த கருப்பு பணஒழிப்பு நடவடிக்கை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏற்று கருப்பு பணத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவகோட்டையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை நகர் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் என்ற பிரபு. இவரது மனைவி கற்பகம் (வயது20). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது.

    காளிதாஸ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கற்பகம் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். பக்கத்து தெருவில் தான் அவரது பெற்றோர் வீடு உள்ளது. நேற்று மாலை அங்கு கற்பகம் சென்றுள்ளார். பின்னர் இரவில் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் விரைந்து வந்து கதவை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வராததால் வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்துள்ளனர்.

    அப்போது கற்பகம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரியவர, போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது கற்பகம் இறந்து விட்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் கருப்புசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    சிங்கம்புணரி அருகே வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மணல் மேல்பட்டியில் வசிப்பவர் உலகம்மை (வயது32). இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர்.

    அவர்கள் கோவிலுக்கு சென்றபோது, 11 வயது சிறுமி மட்டும் வரவில்லை என கூறி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் எதிர்வீட்டை சேர்ந்த காசிநாதன் (37) என்பவர் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். அவர் குடிபோதையில், வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை கண்டதும் காசிநாதன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ராது ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, காசிநாதனை கைது செய்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    குவைத்தில் வேலை பார்த்து வரும், காசிநாதன் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காரைக்குடியில் பணம் எடுக்க ஏ.டி.எம்-க்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி மகர் நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் முத்துலட்சுமி (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் நேற்று அருகில் உள்ள ஏ.டி.எம்.-க்கு சென்று பணம் எடுத்துவருவதாக கூறி விட்டு வெளியே சென்றார்.

    நீண்ட நேரமாகியும் முத்து லட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பாலகிருஷ்ணன் தனது மகளை தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை தேடி வருகிறார்.

    தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்த நர்சு திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் போஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காதுன் ‌ஷரீபா (வயது 45). இவரது மகள் ஹபீபா செல்வா (19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர், சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் ஹபீபா செல்வா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காதுன் ‌ஷரீபா, சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, மாயமான ஹபீபா செல்வாவை தேடி வருகிறார்.

    இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மாமன் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள் (வயது 22). இவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நான், மணியாரம் பட்டியில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருந்தேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் அங்கு படுத்திருந்தபோது, மாமா மகன் கருப்பையா (22) பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

    இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிச் சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராதுராஜீ வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியான கருப்பையாவை தேடி வருகிறார்.

    ×