என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் போலீஸ் லாவண்யா. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் போலீஸ்
    X
    பெண் போலீஸ் லாவண்யா. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் போலீஸ்

    திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: 2 பேர் சிக்கினர்

    திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசியது தொடர்பாக போலீசாரின் வளையில் 2 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பீரான்லைனில் வசிப்பவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி லாவண்யா (வயது 27). திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    லாவண்யா நேற்றிரவு 9.30 மணியளவில் பணி முடிந்ததும், வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது அங்கு கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லை. இருள் சூழ்ந்திருந்தது.



    தனது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே லாவண்யா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். அப்போது இருளில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் லாவண்யா மீது திடீரென ஆசிட் வீசினர்.

    பெண் போலீஸ் லாவண்யாவின் முகம், கை, உடலில் ஆசிட் பட்டு வெந்தது. இதனால் அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். வலியால் அலறி துடித்தார். ஆசிட் வீசிய மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். பெண் போலீசார் ஆசிட் வீச்சால் கதறி துடிப்பதை பார்த்து திடுக்கிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

    பெண் போலீஸ் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக அவர், வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் லாவண்யாவின் தந்தை தண்டபாணி புகார் அளித்தார்.

    டி.எஸ்.பி. பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆசிட் வீசிய நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    லாவண்யாவின் தந்தை அளித்த புகார் மனுவில், தனது மகளின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர். அந்த எண்ணுக்கு மீண்டும் போன் செய்தால் எதிர்முனையில் பேசியவர்கள் போனை எடுப்பதில்லை.

    எனவே இச்சம்பத்தில் போனில் மிரட்டலாக பேசிய நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இத்தகவலின் பேரில் பெண் போலீஸ் லாவண்யாவின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    நேற்றிரவு ஆசிட் வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை லாவண்யா யார் யாரிடம்? பேசினார், அவருக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளது? என்ற பட்டியலை சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட முக்கிய குடியிருப்புகளும் உள்ளன. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.

    இதற்கிடையே பெண் போலீஸ் மீது ஆசிட் வீசியது தொடர்பாக போலீசாரின் வளையில் 2 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

    பெண் போலீசார் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×