என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மானமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி வழியாக தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் முன்னாள் தாசில்தார் அங்குச்சாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராசு வரவேற்றார். நிர்வாகிகள் மாசானம், பாண்டியன், காமாட்சி ஆகியோர் பேசினர். பாலுச்சாமி நன்றி கூறினார்.

    இதில் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் மீனாட்சிசுந்தரம் தீர்மானங்களை வாசித்தார்.

    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

    மானாமதுரை மேல் கரையில் இருந்து வைகை ஆற்றின் குறுக்கே கன்னார் தெருவிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்துதர வேண்டும். மானமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி வழியாக தினமும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிங்கம்புணரியில் மஞ்சு விரட்டில் காளையை அவிழ்த்து விட்ட எச். ராஜா உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாட்டு பொங்கல் அன்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

    சிங்கம்புணரியில் நடந்த மஞ்சு விரட்டில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தடையை மீறி காளையை அவிழ்த்துவிட்டார்.

    இது தொடர்பாக எச். ராஜா மற்றும் சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அதுபோல தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய காளைபூர், சூரக்குடி, தத்துக் குடிபட்டி ஆகிய பகுதிகளில் 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கவில்லை.

    அதனால்தான் நான் சிங்கம்புணரி, புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைகோட்டையில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டேன். மஞ்சுவிரட்டு நடத்துபவர்களை கைது செய்யக்கூடாது.

    ஜெயலலிதா இறந்தபோது அவர் மீது கொண்ட நட்பு காரணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து மலரஞ்சலி செலுத்தினார். 5ம் தேதி இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏகமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தனர். இதற்கு சட்டப்படி மத்திய அரசு ஒத்துழைப்பு நல்கியது. பொதுச்செயலாளராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்த சர்ச்சை எழுந்தபோது உட்கட்சி விவகாரம் என்பதால் பா.ஜ.க எந்த கருத்தும் சொல்லவில்லை.

    இது தெரியாமல் சசிகலா கணவர் நடராஜனும், திவாகரனும் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வம்பை விலைக்கு வாங்கும் நடராஜனின் சூது இது.

    அ.தி.மு.க. வை உடைக்க பா.ஜ.க வேண்டும் என்பது இல்லை. நடராஜனும், திவாகரனும் சேர்ந்து அதை சுக்கு நூறாக உடைத்து விடுவார்கள். அ.தி.மு.க.வை பற்றி பேச நீங்கள் யார்?

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைய வேண்டும்.

    தமிழகம் 2 குடும்பங்களின் ஆட்சியை தாங்காது. இதற்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் நரி உலகை பார்த்து உபதேசம் சொன்னதாம் என்பது போல் இருக்கிறது நடராஜன் பேச்சு.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஜல்லிக்கட்டுக்காக பாரதிய ஜனதா கட்சி உண்மையாக போராடி வருகிறது என்று அதன் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது சொந்த காளையை சீரணி அரங்கம் முன்பு அவரே அழைத்து வந்து அவிழ்த்து விட்டார். அதனை பிடிக்க ஏராளமான இளைஞர்கள் விரட்டி சென்றனர். எச். ராஜாவின் இந்த செயலால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாம் பாரத நாடு பழம் பெருமையான நாடு. இங்கு விவசாயம் தான் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்துக்கு பல்வேறு வகையிலும் மாடுகள் உதவியாக இருந்து வருகின்றன. ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்க வேண்டும், இதற்காக பாரதிய ஜனதா கட்சி உண்மையாக போராடி வருகிறது. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அவசர சட்டம் கொண்டு வரமுடியாது. சட்டம் படித்தவர்களுக்கு இது தெரியும்.

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அன்றைக்கு சரி, இன்றைக்கும் சரி ஜல்லிக்கட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவாக இருக்கும். ஜல்லிக்கட்டு பிரச்சனையில் சிலர் தனி தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு பிரச்சனையை திரைத்துரையினர் தூபம் போட்டு வளர்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காரைக்குடி:

    சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் அட்டானூர் ரகுமான் (வயது44). கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், தனது உறவினர்கள் சிலருடன் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு காரில் சுற்றுலாவாக ராமேசுவரம் புறப்பட்டார்.

    இன்று காலை 4.30 மணி அளவில் திருச்சி -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி அருகே உள்ள ஆவுடைபொய்கை பகுதியில் அந்த கார் வந்தது. அப்துல்காதர் (25) என்பவர் காரை ஓட்டி வந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மும்தாஜ் (60) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த முகமது சல்மான் (12), முகமது யூசுப் (9), ஆயிஷா சுல்தானா (5) ஆகிய 3 குழந்தைகள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் முகமது யூனூஸ் (60), கார் டிரைவர் அப்துல் காதர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பத்தூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர், மூதாட்டி இறந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பழனிக்குமார் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவருவது வழக்கம்.

    இன்று காலையும் அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ரணசிங்கபுரம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த பாண்டியன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகில் உள்ள நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கருப்பாயி (65). இவர் இன்று காலை ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அங்குள்ள பை-பாஸ் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பாயி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருமயத்தை சேர்ந்த ஆனந்த பாபு (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டிற்கான தடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே சிராவயலில் அனைத்துக் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டிற்கான தடையை அகற்றக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் வேலுச்சாமி அம்பலம் தலைமை வகித்தார்.

    தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரிய கருப்பன், தி.மு.க.இலக்கிய அணி முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூ, கட்சி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உதயகுமார், தே.மு.தி.க. சார்பில் சரவணன், ம.தி.மு.க. சார்பில் இருதயராஜன், விடுதலை விரும்பி, தமிழர் தேசிய முன்னணி சார்பில் மாநிலச் செயலாளர் மாறன், தமிழர் முன்னணி தேசியச் செயலாளர் சரவணன், சமத்துவ மக்கள் கட்சி பிரான்சிஸ் அந்தோணி, ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலச் செயலாளர் நாராயணன், காங்கிரஸ் சார்பில் மாங்குடி, டாக்டர்.திருப்பதி, இந்திய குடியரசு கட்சி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கக் கோரியும், நிபந்தனை இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்யக் கோரியும் அனைத்துக் கிராமங்களிலும் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெறக் கோரியும், தொடர் முழக்கமிட்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிரா வயல் மஞ்சுவிரட்டு விழாக்குழு மற்றும் அனைத்து மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தய ஆர்வலர்கள் மற்றும் சிராவயல் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் பாரம்பரிய பண்பாடு காக்க மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அதற்காக நடந்த சென்னை மெரினா ஆர்ப்பாட்டம் முக்கியமானதாகும். தொடர்ந்து நடைபெறப் போகும் மாணவர்கள் போராட்டத்தால் நமது பண்பாடு காக்கப்படும். விவசாயம் பாதிக்கப்பட்டதற்கும் மழை பொய்ப்பிற்கும் கலாச்சார மரபுகள் அழிக்கப்பட்டதுதான் காரணம். இந்த ஆண்டு எந்த தடையிருப்பினும் சிராவயலில் மஞ்சுவிரட்டு நடந்தே தீரும். இதற்கு அனைவரும் ஒன்றுகூடி ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
    சிவகங்கையில், ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் கார்த்திகைசாமி (வயது 26). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, மிரட்டல் செய்ததாக வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று கார்த்திகைசாமி தனது ஆதரவாளர்களுடன் மதுரைக்கு காரில் சென்றார்.

    மதுரை மாவட்டம், கூடக்கோவில் போலீஸ்சரகம், எலியார் பத்தியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட்டுள்ளார். அப்போது பங்க ஊழியரான மதுரை கைத்தறிநகரை சேர்ந்த நாகராஜன் என்பவருடன் அந்த கும்பல் தகராறு செய்தது.

    இதில் ஆத்திரமடைந்த கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாகராஜனை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரத்த வெள்ளத்தில் அவர் அங்கு மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கி விட்டு தப்பியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர்.

    ஊழியரை தாக்கிவிட்டு சென்ற கும்பல் சிவகங்கையை நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தமாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து ரோந்து போலீசாருக்கும் தப்பி சென்ற கும்பலின் கார் எண் வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் டி.எஸ்.பி. பால முருகன், சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள சிவகங்கை மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை கார்த்திகை சாமி தனது ஆதரவாளர்களுடன் காரில் மானாமதுரை சோதனை சாவடிக்கு வந்தார். அங்கு போலீசார் காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் கார்த்திகை சாமி காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் காரை விரட்டி சென்றனர்.

    இந்நிலையில் மானா மதுரை- சிவகங்கை ரோட்டில் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் வேல்முருகன் ரோந்து பணி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கிடைத்ததன் பேரில், கார்த்திகை சாமி அந்த வழியாக ஓட்டி வந்த காரை மறித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வேல்முருகனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

    பின்னர் அந்த கும்பல் சிவகங்கை அருகே உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியது.

    சிவகங்கை டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், தொடர்ந்து ரவுடி கார்த்திகை சாமி மற்றும் அவரது கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனிடையே கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை அருகே காயான்குளம் பகுதியில் உள்ள மூட்புதரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் கார்த்திகைசாமி மற்றும் அவரது கும்பலை சரண் அடையுமாறு போலீசார் எச்சரித்தனர்.

    ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததோடு திடீரென்று போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகைசாமி மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது தப்ப முயன்ற கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

    சிவகங்கையில், ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீசார் தற்காப்புக்காக ரவுடியை சுட்டனரா? அல்லது என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்படுத்தி யுள்ளது.

    ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி காரைக்குடியில் இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், காளை வளர்ப்போர் மற்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது இந்த போராட்டத்தில் மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் நடந்த போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

    இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பிய மாணவர்கள், தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    மாணவர்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    தடையை மீறி பேரணியாக சென்றால் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பணிபுரியும் தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
    சிவகங்கை:

    பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து வருகிற 14-ந் தேதி பொங்கலன்று தமிழகத்தில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.

    தமிழர்களின் கலாச்சார பண்பாட்டினை உணர்த்திடும் வகையில் பொங்கலன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தபால் துறையில் பணிபுரியும் ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு 14-ந் தேதி பொங்கலன்று விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

    ஆனால் தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது. மத்திய அரசுத்துறையான தபால் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழ் பண்டிகையான பொங்கல் தினம் மட்டும் தான் விடுமுறை ஆகும். அந்த விடுமுறையும் தற்போது மத்திய அரசு இல்லை என்று கூறி விட்டது.

    எனவே மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) பொங்கலன்று அனைத்து தபால்துறை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தபால் துறையில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

    நகர் மற்றும் கிராமப்புற அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் பணிகள் பாதிக்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தபால் துறை ஊழியர்கள் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளார்கள்.
    வீட்டில் புகுந்து நகை- டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் முத்து நகரைச் சேர்ந்தவர் கொங்கேஸ்வரி (வயது24). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நைசாக காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்தது. பீரோவை திறந்து அதில் இருந்த 3¾ பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டி.வி., ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    வீடு திரும்பிய கொங்கேஸ்வரி, கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    திருப்பத்தூரில் கல்லூரி மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.போலீசார் வழக்குப்பதிவு செய்த மாணவியை தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    திருப்பத்தூர் நகர் பிரபாகரன் காலனியைச் சேர்ந்தவர் முகமது அஸ்ரப் (வயது 42). இவரது மகள் தஸ்லிமா பானு (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல தஸ்லிமா பானு கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரது உறவினர் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களிலும் பெற்றோர் தேடினர். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் போலீசில் முகமது அஸ்ரப் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் வழக்குப்பதிவு செய்து மாயமான தஸ்லிமா பானுவை தேடி வருகிறார். அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×