என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணி ஆணை பெற்றவர்களுடன் மத்திய இணை மந்திரி ஷோபா கரண்ட்லஜா, சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கல்
- மத்திய அரசு வேலைவாய்ப்பு முகாம்களில் 5.60 லட்சம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடி இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய இணை மந்திரி சோபா கரண்ட்லஜே கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் 8-வது முகாம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதனடிப்படையில் சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 206 நபர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற 7 முகாம்களின் மூலம் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், காவல்துறை துணைத்தலைவர் (சத்தீஸ்கர்) விஜயகுமார் டோக்ரா, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், மத்திய வேளாண்மை இயக்குநர் வெங்கட சுப்ரமணியன், இந்தோ திபத் எல்லைக்காவல் படையைச் சார்ந்த துணை கமாண்டெண்ட்கள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்ட் ராகுல் ராணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.